ஐரோப்பாவின் சிறந்த லீக் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையின் முதல் நாள் ஆட்டங்கள் முடிவடைந்தன. ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் நெதர்லாந்தின் பிஎஸ்வி அணிகள் மோதிய ஆட்டத்தில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்வி அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸியின் மூன்று கோல்கள் அடித்து பார்சிலோனாவை வெற்றியடையச் செய்தார். 

டெல்லி மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 'இந்து ராஷ்டிரா என்றால் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது அர்த்தமில்லை. ஒருவேளை, நாம் இஸ்லாமியர்களை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதற்குப் பெயர் இந்துத்துவம் இல்லை. இந்துத்துவம் என்பது இஸ்லாமியர்களையும் உள்ளடக்கியது' என்றார்.

தமிழிசைக்கு எதிராக மாணவி ஷோபியா குரல் எழுப்பியபோது விமானநிலையத்தில், பா.ஜ.கவினர் அவதூறாக பேசி தாக்க முயற்சி செய்தனர் என்று மனித உரிமைகள்  ஆணையத்தில் ஷோபியாவின் தந்தை புகார் செய்திருந்தார். இதுதொடர்பாக ஆஜராவதற்கு மனித உரிமைகள் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

`தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், நீயா, நானா எனப் போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்யும் ஊழல் பேர்வழிகளான  முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள்,அவர்களுடைய உறவினர்கள் மற்றும் பினாமிகள் என அனைவரையும் சிறையில் அடைப்போம்' என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

ஹெச்.ராஜாமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பாளர் கண்ணதாசன் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட அரசு தலைமை வழக்கறிஞர், அக்டோபர் 3-ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  

கர்நாடக அமைச்சர் சிவகுமார் மீது வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா முறை பண பரிமாற்றம் ஆகிய வழிகளில் பண மோசடி செய்ததாக வருமான வரித்துறை இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சிவகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’முதல்வர் மீதோ, மற்றவர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில், ஊழல் செய்ததாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஊழலின் தந்தையாக விளங்குவது தி.மு.க தான்’ என்றார்.

சென்னையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிறந்த சில மணி நேரங்களே ஆகியிருந்த பச்சிளங்குழந்தையொன்று கழிவுநீர் கால்வாயில் கிடந்தது. குழந்தை சுவாசத்துக்காகப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்த கீதா, அடுத்த நிமிடமே துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டார். மருத்துவமனையில் இருந்த அந்தக் குழந்தை நேற்று கீதாவிடமே ஒப்படைக்கப்பட்டது. 

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19.21 சதவிகிதம் அதிகரித்து 2,784 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 16.13 சதவிகிதம் உயர்ந்து 13,609 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இறக்குமதி 17.34 சதவிகிதம் அதிகரித்து  21,643 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

கூடுவாஞ்சேரி அருகே, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி அடையாளம் காட்டியதன் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (60), சிதம்பரம் (40), சங்கர் (45) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

`கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றால், அது அ.தி.மு.க அரசு போட்ட பிச்சை. மெரினாவில் கருணாநிதி சமாதி அமைந்தது அ.தி.மு.க அரசு போட்ட பிச்சைதான்’ எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

`கோவை மாநகராட்சி, சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள குடிநீர் விநியோக உரிமையை ரத்துசெய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி விடுதியில், 32 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்கள் விடுதியில் கஞ்சா விற்பனை செய்தது, சக மாணவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது என்று காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’உள்ளாட்சிகளுக்கான நிதி,  நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி என 1400 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பிச்சை என்கிற வார்த்தையை அமைச்சர் கடம்பூர் ராஜூ பயன்படுத்தியிருக்கக் கூடாது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது மக்கள் போட்ட பிச்சை’ என்றார்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசிய பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கண்டித்து ராமேஸ்வரம் திருக்கோயில் அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஹெச்.ராஜாவை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

பேராசிரியர் நல்லூர் சரவணன் பதிப்பித்த புத்தகத்தைக் கண்டித்து, சென்னைப் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்து முன்னணி அமைப்பினரை வெளியேற்றக் கோரியும், நல்லூர் சரவணனை ஆதரித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே  இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட  ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நாமக்கல் நல்லிபாளையம் சாலையில் புதியதாக கட்டப்பட்டுவரும் நகராட்சியின் புதிய கட்டடத்தை நேற்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்  கே.பி.பி.பாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்தார்.

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.  பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம்,  நீலாங்கரை பல்கலைநகர், எண்ணூர் ராமகிருஷ்ணாநகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆசியக் கோப்பைத் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 127 ரன்களும் அம்பத்தி ராயுடு 60 ரன்களும் குவித்தனர். அதனையடுத்து, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது.

கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு இந்து அறநிலையத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதோடு, கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றுவது மிகவும் அவசியம். ஆனால், அவர்கள் இயந்திரமாகப் பணியாற்றி வருகின்றனர் என்று கருத்து தெரிவித்தது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் இயங்கிவரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கென தனியாக ஒரு துறை தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 மாணவர்கள் 'தமிழ் மொழி மற்றும் இலக்கியம்' பற்றிய 4 வருட பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.

திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, ’லஞ்சம் கொடுக்கும் வெளிநாட்டவர்களுக்கு, நம் தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. நல்ல மனதோடு நம் மக்கள் தானம் செய்யும் உறுப்புகள் அனைத்தும் லஞ்சம் கொடுப்பவர்களுக்குப் பொருத்தப்படுகிறது’ என்றார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின் சார்பில், கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே இன்று கூடிய திமுக தொண்டர்கள், திமுக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். குட்கா ஊழலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய அவர்கள், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைப் பதவி விலக வலியுறுத்தி, கோவையில் இன்று தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, `இந்தியாவிலேயே அதிகளவு  ஊழல் செய்தவர் கோவை மாவட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. பிளிச்சீங் பவுடர், பினாயில் போன்றவற்றிலும் வேலுமணி ஊழல் செய்திருக்கிறார்’ என்றார்.