Business


ரூபாய் நோட்டுத் தயாரிப்பில் டெண்டர் கோரும்போது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சொந்த நாட்டிலேயே மூலப் பொருள்கள் கொண்டு தயாரிப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் தாள்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு இழை, விசேஷ மை ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்தது. தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்தபடி பங்கேற்றார். இதில் சிகரெட் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மாநில அரசுகளின் நிதி அதிகப்படியாக வீணாவதாக மத்திய அரசு குறை கூறியது. இதையடுத்து நிதி வீணாவதிலிருந்து மாநில அரசுகளைக் காக்க மத்திய நிதி ஆயோக் புதிய யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளது. இதன்படி மாநில இலவசத் திட்டங்களைப் பெற ஆதார் அவசியம் என ஆலோசனை கூறியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பொதுமக்கள் பலரும் தங்களின் பல தேவைகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனையை முறையை கடைபிடிக்கத் துவங்கினர். அதன் பலனாக கடந்த 8 மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை 23% உயர்ந்துள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் 7% உயர்ந்துள்ளது. 

 

செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை  எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாகவும், இந்தப் பணி இன்னும் முடிவடையவில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக, மற்ற விடுமுறை நாள்களைக் கூட ரத்து செய்துவிட்டு 500, 1000 ரூபாய் தாள்களை எண்ணும் பணி நடைபெற்று வருகிறதாம்!

’ஆயிரம் ரூபாய் வரையிலான, ஐ.எம்.பி.எஸ் (IMPS) பரிவர்த்தனைகளுக்கு, இனிமேல் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது' என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ஐ.எம்.பி.எஸ் என்பது உடனடி பணப் பரிமாற்ற ஆன்லைன் சேவை. எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இனி 1000 ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் இல்லாமல் ஐ.எம்.பி.எஸ் பணபரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 66.36-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 57.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலை 6 மணி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வந்தது. 

உலகிலேயே முக்கியமான பணம் என்றால் அது டாலர்தான். பல நாடுகளில் இந்த பணப்புழக்கம் இருந்தாலும் ஐக்கிய அமெரிக்க நாடே டாலர் தேசம் என்று அழைக்கப்படுகிறது. அதன் வரலாற்றையும் முக்கிய தகவல்களையும் தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். இது குறித்த விவரங்களுக்கு லிங்க்கை க்ளிக்கவும்.

இந்தியாவில் முன்னணி இணையவழி வர்த்தக  நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த சில்லரை உணவு வர்த்தகத்தில் கால் பதிக்க உள்ளது. இதற்காக 500 மில்லியன் டாலருக்கான உணவுப்பொருள் விற்பனை அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது அமேசான். 

புதுச்சேரியில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசல் - ஒரு லிட்டர் - 56.53ரூபாய்க்கும், பெட்ரோல் - ஒரு லிட்டர் - 62.69 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியைக் கொண்டுவருவது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் கோரியது. UPI எனப்படும் ஒரே இடத்தில் பணம் செலுத்தும் வகையில் அந்நிறுவனம் தனது அப்ளிகேஷனில் மாறுதலைக் கொண்டுவர உள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.

 'எ பயோமெட்ரிக் ஹிஸ்டரி' (A biometric history) என்ற பெயரில் புதிய புத்தகம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ஆதார் திட்டம், அதைப் பயன்படுத்தும் முறைகள், பிரச்னைகளைச் சரிசெய்வது போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்களுக்கு ஜி.எஸ்.டி குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆனந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் வணிகர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். 

திருப்பூர் மாவட்டம் சோளிபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு உரிய வகையில் சொகுசு காரில் சுற்றித் திரிந்த நபர்களை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய் அளவுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.

வாரத்தின் இறுதி நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தை 8 புள்ளிகள் சரிந்தது. இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 8.71 புள்ளிகள் வீழ்ந்து, 31,360 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.75 புள்ளிகள் குறைந்து, 9,665 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு ரயில்களில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று சலுகைகள் வழங்குவதால் ரயில்வே துறைக்கு ஒவ்வொர் ஆண்டும் 1,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. சலுகை வேண்டாம் என்பவர்கள் விட்டுகொடுத்துவிடலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

”ரிசர்வ் வங்கி 2005-ல் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், 'கணக்கு திறப்பு படிவம், பணம் எடுக்கும்-செலுத்தும் படிவம் உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனை படிவங்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் அச்சிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.  இதை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் ரூ.1680 கோடியை முதலீடு செய்துள்ளது.

இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. சர்வதேச அளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு பலவீனமடைந்ததாலும் உள்நாட்டு பங்குச்சந்தையின் உயர்வு காரணமாகவும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.64.73 காசுகளாக உள்ளது.

நாட்டிலேயே அதிகப்படியான தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளதென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் 16%தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் குஜராத் மாநிலத்திலேயே அதிகளவில் உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 11.83 புள்ளிகள் வீழ்ந்து, 31,209 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 1.70 புள்ளிகள் குறைந்து, 9,613 புள்ளிகளாகி நின்றது. அந்நிய முதலீடுகளுக்கான வரம்புகள் இன்று முதல் அமலுக்கு வருவதால் இந்த சரிவு என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

’நேர்மையான முறையில் பணம் சம்பாதித்தவர்கள், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டுமொரு வாய்ப்பு தர வேண்டும்’ என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.  

ஜிஎஸ்டி அறிமுக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 64.09 புள்ளிகள் உயர்ந்து, 30,921 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 16.80 புள்ளிகள் உயர்ந்து, 9,520 புள்ளிகளாகி நின்றது.

ஜிஎஸ்டி வரி முறையினால் விலைவாசி குறையும் என்றும், ஜெயலலிதா சொன்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாலே தமிழகம் ஜிஎஸ்டியை ஏற்று கொண்டது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ‘ஜிஎஸ்டி முறையால் குறைகள் ஏற்பட்டாலும் நிவர்த்தி செய்யப்படும்’ என்றார்.

ஜி.எஸ்.டி வரியால் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.  1200 பொருட்கள்  ஜி.எஸ்.டி.வரிக்குள் வருகிறது. இந்த வரிவிதிப்பின் பலனை இனிவரும் காலங்களில் நாட்டுமக்கள் உணருவார்கள்” என்று  ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் வரவேற்புரை ஆற்றினார் அருண் ஜெட்லி.