சித்திரை முதல் நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி, வழிபாடு செய்து பொன்னேர் உழவு உழுது சிறுதானிய விதைகளை விதைத்தனர். `காலையிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, அதுகளுக்கு பொட்டு வச்சு, தயார் படுத்தினோம். ஏர்க்கலப்பைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வச்சு  பூமாலை போட்டு, கலப்பையை தோளில் தூக்கிட்டு, கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு விளை நிலத்துக்கு வந்தோம்' என்றனர் விவசாயிகள்.

pon err uzavu

பொன்னேர் உழுதலைப் பற்றி தூத்துக்குடி மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வரதராஜனிடம் பேசினோம், “சித்திரை மாத புழுதி பத்தரை மாற்று தங்கம்” என கிராமத்தில் சொல்வடையே இருக்கு. சித்திரை மாசப் பிறப்பான இன்று பொன்னேர் உழுதல் சிறப்பு. நல்ல நேரம் பார்த்து உழுவதால் இதனை ‘நல்லேர் பூட்டுதல்’ எனவும் சொல்லுவார்கள். 

pon err uzavu

காலையிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, அதுகளுக்கு பொட்டு வச்சு, தயார் படுத்தினோம். ஏர்க்கலப்பைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வச்சு  பூமாலை போட்டு, கலப்பையை தோளில் தூக்கிட்டு, கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு விளை நிலத்துக்கு வந்தோம். நிலத்தில் சிறிய விளக்கேற்றி,  மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அருகம்புல் சொறுகி, நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காய்ப்பழம் உடைச்சு ,  மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும்  சாம்பிராணி, சூடம்  காட்டினோம். பிறகு, மாடுகளை சூரியனை நோக்கி கிழக்குப் பார்த்து நிறுத்தி ஏர் பூட்டினோம். இன்னைக்கு கிழக்குமேல் சூலம் என்பதால் வடக்கு மேலாக உழவு செய்தோம். உழவுக்குப் பிறகு, கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு..ன்னு இந்தப் பட்டத்தில் என்ன விதைக்கிறோமோ அந்த விதைகளை மூணு கைப்பிடி எடுத்து பரவலா விதைச்சு விடுவோம். உழவு முடிந்ததும் தாகம் தீர்க்க.., பானகம் அல்லது மோர் குடிச்சுட்டு நிலத்துல இருந்து வீட்டுக்கு வருவோம். 

pon err vuzavu

தொழுவத்துல மாட்டைக் கட்டிப் போட்டு பருத்திவிதை, பிண்ணாக்கு, கழனிதண்ணி, திவனப்புல்லுன்னு வழக்கத்தைவிட கூடுதலா உண்ணக் கொடுப்போம்.  பத்து வருஷத்துக்கு முன்னால வீட்டுக்கு வீடு ஏர்க்கலப்பைகள் இருந்துச்சு. இப்போ மாடுகளே இல்ல.., அதனால், மாடுகளால் உழ வேண்டிய உழவு... பாரம்பர்யம் மாறிப் போயி, டிராக்டரால் உழவு செய்ய வேண்டிய நிலைமையில இருக்கு.  

இந்த உழவினால், மண் பொலபொலப்பா மாறிவிடும். இதனால்  மழை பெய்யும்போது நிலத்தில் விழும்  மழைநீர் ஆவியாகாமல் தடுக்கப்படும். மண்ணின் அடியிலுள்ள சின்னச் சின்னப் பூச்சிகள், புழுக்கள் மேற்பரப்பில் கொண்டுவரப்படும். அந்தப் பூச்சிகள் பறவைகளுக்கு இரையாகும். மண் இடுக்குகளில் உள்ள கூண்டுப்புழுக்கள், முட்டைகளும் வெயிலில் காய்ந்துவிடும். ஆழமாக உழவடித்தால்தான் அதிக தண்ணீரை நிலத்துக்குள் சேமிக்க முடியும். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நில விவசாயிகளுக்கு கோடைமழைதான் உயிர்நாடி. சித்திரையில் பொன்னேர் கட்டி , கோடை உழவை முறையாக அடித்தால் நிச்சயம் மகசூல் கூடும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.” என்றார்.