International


இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவுசெய்துள்ளன. மகிந்த ராஜபக்சே அணியைச் சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மூன்று அமைச்சர்களும் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர். ஏப்ரல் 4ம் தேதி தீர்மானம் மீது விவாதம் நடக்கவுள்ளது.

ரஷ்யாவில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலைப் பார்வையிடுவதற்காக நமல் ராஜபக்சே சென்றிருந்தார். பின்னர் மாஸ்கோவிலிருந்து அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரை விமானத்தில் ஏற்ற எமிரேட்ஸ் நிறுவனம் அமெரிக்கத் தூதரகத்தின் அறிவுறுத்தலின்படி மறுப்புத் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு ஜஹான் டாப் என்ற பெண் தேர்வு எழுத சென்றுள்ளார். அந்த பெண் தேர்வு எழுதும்போது, அவரது இரண்டு மாத குழந்தை திடீரென அழுததால், மடியில் வைத்து கவனித்துகொண்டே தரையில் அமர்ந்து தேர்வு எழுதினார். அந்தப் புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் செம்ம வைரலாகி வருகிறது.

பிரிட்டன் நகரான லீசெஸ்டரில் வரும் ஏப்ரல் 9 முதல் 13 வரை தேசிய சமோசா வாரம் கொண்டாடப்படவுள்ளது. இந்த காலகட்டத்தில் சமோசா மூலம் கிடைக்கும் வருமானம் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கபடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

`ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான். ஃபேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களைப் பாதுகாப்பது எங்கள் அடிப்படை கடமை. அதைச் செய்யத் தவறிவிட்டோம். அதனால், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாது' என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டதாக, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 39 நபர்களின் டி.என்.ஏ ஒத்துப் போவதாகவும், இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வர அமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் அதிபர் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2000 ஆண்டு முதல் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். தற்போது இவரின் பதவிக்காலம்முடிவடைந்த நிலையில் இன்று அதற்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இவரைத் தவிர இந்தத் தேர்தல் களத்தில் 7 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.

இலங்கையில் அமலில் இருந்த அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டதாக, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இஸ்லாமிய மதத்தினர்க்கும் புத்த மதத்தினர்க்கும் இடையே நடந்த மோதலால்  கலவரம் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். அதனால், கடந்த மார்ச் 6-ம் தேதி அன்று அவசர நிலையை அமல்படுத்தினார் அதிபர்.

மியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்துக்கு முக்கிய பங்கு உள்ளதாக ஐ.நா மனித உரிமை நிபுணர் மர்சூக்கி தருஸ்மன் குற்றம்சாட்டியுள்ளார். அதில், ஃபேஸ்புக் மிருகத்தனமாக மாறி, மத வன்முறையைத் தூண்டும் விதமாகவே செயல்பட்டது என்றார். அதே நேரத்தில் ஐ.நா-வின் குற்றச்சாட்டை ஃபேஸ்புக் மறுத்துள்ளது.

 

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் 76வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்பு செய்தியினை அவரின் குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீவன் ஹாகிங், இயற்பியல் உலகம் போற்றும் தன்னிகரற்ற நம்பிக்கை நாயகன். 

மியான்மர் நாட்டிலிருந்து வெளியேறிய இஸ்லாமிய மக்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அந்நாட்டு ராணுவத் தளங்களாக மாறியுள்ளன என அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மியான்மர் - வங்கதேசம் இடையே ரோஹிங்யா இஸ்லாமிய மக்களை 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் மியான்மர்க்குத் திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

நேபாளம் தலைநகர், காத்மண்டு விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது. அமெரிக்காவிலிருந்து வந்த இந்த வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகிவுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

நேபாளம் தலைநகர், காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்தp பயணிகள் விமானத்தில் 70 பேர் பயணித்ததாகth தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.  அமெரிக்காவிலிருந்து வங்கதேசம் செல்லும் வழியில் நேபாளத்தில் இறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரத்தில் வசந்தகால விழா கொண்டாட்டத்தின்போது சிங்கக் குட்டியுடன் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சிங்கக் குட்டி ஒரு சிறுமியை மட்டும் கடிக்க முயன்றது. நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுமி பின்னர், காப்பாற்றப்பட்டார். அந்த வீடியோ வைரலாகிறது.

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியிலுள்ள ஷியா பிரிவினருக்கான மசூதி அருகில் தற்கொலைப் படைத் தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். அதில், ஏழு பேர் பலியாகினர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வடகொரிய அதிபரின் அழைப்பின் பேரில் அமெரிக்க அதிபர் அவரை சந்திக்க இருப்பதாகவும், சந்திக்கும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படியான வருமானம் பெறுவதால், ஊதிய உயர்வு தேவையில்லை என்று கனடா நாட்டைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள், அந்நாட்டு மருத்துவக் கவுன்சிலிடம் மனு அளித்துள்ளனர். தங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் பணிச்சுமை கரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாவதால் ஊதிய உயர்வு வேண்டாம் என நிராகரித்துள்ளனர். 

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா பயன்படுத்திய `லேடி லெக்ஸ்’ எனும் போர் கப்பலை 76 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா கடல் பகுதியில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலென் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர். இந்தப் போர்கப்பல் இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தது.

இலங்கையில் இன்று முதல் 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகக் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகவும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் மாளிகையின் எதிரே  உள்ள நடைபாதையில் இன்று இளைஞர் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  உறவினர்களின்  பாதுகாப்புக்காக அந்த இளைஞர் குறித்த தகவல்களை வெளியிடவில்லை. இதில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தின் போது ட்ரம்ப் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் மாளிகையில் இல்லை. 

கென்யாவில் மருத்துவமனை ஒன்றில், நேற்று முக்கியமான மூளை அறுவை சிகிச்சை நடந்து வந்துள்ளது. அறுவை சிகிச்சையில் மூளையில் ரத்த கட்டி இல்லாததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடந்தனர். அதன் பின்னர் தான், குறிப்பிட்ட நோயாளிக்கு பதிலாக வேறு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தது தெரிய வந்தது. அந்த மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பிரிட்டன் இளவரசர் - மேக்கன் மார்க்கில் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த திருமணத்தில் பங்கேற்க 2,640 பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர். தங்களது திருமணத்தில் பொதுமக்களும் இருக்க வேண்டும் என்பது மணமக்களின் விருப்பமாம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு என்ற செய்தி மிக சாதாரணமான செய்திபோல் ஆகிவிட்டது. ஃபுளோரிடாவில் நடந்த துப்பாக்கிச்சூடு நினைவுகள் மறைவதுக்கு முன் நேற்று மத்திய மிக்கிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இலங்கை இறுதிப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து அறிய இலங்கை அதிபர் சிறிசேனா குழு ஒன்றை அமைத்துள்ளார். ஸாலியா பெரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழுவில் 2 தமிழர்கள் மற்றும் ஒரு இஸ்லாமியர் உள்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழு அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தன் பணிகளைத் தொடரும்.

தான் செல்ல வேண்டிய விமானம் இது இல்லை என்று அமெரிக்க விமானத்தில் பயணித்த ட்ராய் ஃபட்டூன் என்பவர், தொடர்ந்து கத்திக் கூப்பாடுபோட்டு, விமானத்தின் அவசரக்கால ஜன்னல் கதவைத் திறந்து, அதன் வழியே குதித்துத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விமானம் தாமதமாகப் புறப்பட்டது.