Politics


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறுகிற மாநில சுயாட்சி மாநாட்டில், மாநில உரிமைகளை மீட்டெக்கும் வகையில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதாவை அமல்படுத்தக் கோரி, நரேந்திர மோடிக்கு, சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சட்டத்தை, பா.ஜ.க-வுக்கு மக்களவையில் தற்போதுள்ள மெஜாரிட்டியைப் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும் எனவும் சோனியா கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்த கையோடு அவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க முடிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாகக் கூறி 14 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசன் வரவேற்றார். தமிழகத்தில், ஆளும் கட்சியையும் அரசின் ஊழலையும் கமல் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், கேரள மற்றும் டெல்லி முதலமைச்சர்கள் அவரை சந்தித்துப் பேச இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பணப்பட்டுவாடா புகாரால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதிலளித்தார். அதில் அவர், `பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியது, மாநில காவல்துறைதான்' எனக் கூறியுள்ளார்.

ராஜீவ் படுகொலை வழக்கில் 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாத கால பரோல் கிடைத்துள்ள பேரறிவாளனை அவரது இல்லத்தில் இன்று இயக்குநர் வெற்றிமாறன் சந்தித்தார். அப்போது அவர், 'பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு என்பதால் திரைப்படம் ஆக்குவது கடினம். அவருக்கு நிரந்தர விடுதலை வேண்டும்' என்றார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 'புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் முறைகேடில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, பல்வேறு அதிகாரிகளின் வீட்டில் ரெய்டும் நடத்திவருகின்றனர். இந்த சி.பி.ஐ ரெய்டுதான் புதுச்சேரிக்கான தீபாவளிப் பரிசு' என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது 14 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.95 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருச்சியில் பேசிய சீமான், தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் மதிப்பது விஜயகாந்த் ஒருவரைத்தான். அவரும் நானும்தான் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அரசியலில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே மக்களின் நலனுக்காகக் கட்சி ஆரம்பித்தோம்’ என்றார்.

வி.சி.க மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நடிகர் கமல்ஹாசனைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் அரசியலில் களமிறங்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

திருநெல்வேலியில் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், '18 எம்.எல்.ஏ-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நல்ல முடிவை அறிவித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் மூலம் நியாயம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நீராடியதால் காவிரி அழுக்காகி விட்டது' என்றார்.

நாகப்பட்டினத்தில் அரசு சார்பில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரனைக் குட்டிக்கதை சொல்லி குத்திக்காட்டி பேசினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சி மீதுள்ள பொறாமையால் ஆட்சி மீது குறை கூறுகிறார்' என்று தெரிவித்தார்.

அனிதாவின் குடும்பத்தினருக்கு தீபா மற்றும் அவர் கணவர் மாதவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அனிதாவின் படத்துக்கு மரியாதை செய்து குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். பின்னர் பேசிய தீபா, 'ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது. ஜெயலலிதாவின் ஆட்சியைச் சீரழிக்கிறார்கள்' என்றார்.

வேலூரில் கடந்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளைக் கொண்டாட கடை ஊழியரிடம் நன்கொடை கேட்டு அவரை அடித்த சம்பவம் நடந்தேறியது. தற்போது மீண்டும் பெரம்பலூரில் அரசு அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'பா.ஜ.க அரசுக்குச் சாதமாகச் செயல்பட்டிருந்தால் சசிகலா சிறைக்குச் சென்றிருக்க மாட்டார். மோடி அரசு பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி காரணமாக மக்களிடம் கடும் வெறுப்பைப் பெற்றுள்ளது' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணன் புதுச்சேரியில் தெரிவித்தார்.

தினகரன் அணியில் இருக்கும் 18 எம்.எல்.ஏ-க்களையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சபாநாயகர். பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மானாமதுரைத் தொகுதி எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடியின் அலுவலகம் இன்று பூட்டப்பட்டது. அப்போது அவரின் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவர், 'இன்றைய உலகின் முக்கியப் பிரச்னையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம். இந்தியாவில் இந்த வேலையில்லா திண்டாட்டத்தை அரசியலாக உருவாக்கித்தான் பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார்' என்றார். 

நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் குடும்பத்தினரைச் சந்திக்கும் பொருட்டு திருச்சி வந்துள்ளார் தீபா. திருச்சியில் தனது ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளுடன் தீபா திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைத் தொகுதி எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இரு தினங்களுக்குப் பிறகு அவரது சட்டமன்ற அலுவலகம் வருவாய்த் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

திருச்சி வந்துள்ள சீமான், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தற்போது நடந்து வரும் ஆட்சி முற்றுப் பெற வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். செய்த பாவத்தை நீக்கிக்கொள்வதற்காகக் காவிரியில் முதல்வர் நீராடுகிறார். இங்கு பா.ஜ.க ஆட்சி நடக்கிறது" என்று தெரிவித்தார்.

மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ’18 எம்.எல்.ஏ-க்களை நீக்கியதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் வருத்தம் உண்டு.  அவர்களை நீக்கியதற்குப் பதில் இடைநீக்கம் செய்திருக்கலாம். ஸ்லீப்பர் செல் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. நான் சுதந்திரமாக முடிவெடுப்பேன்’ என்றார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், வழக்கு முடியும் வரை காலியாக உள்ள தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது குறித்து சுப்ரமணியன் சுவாமி, ’இரண்டு வாரத்துக்குள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது’ என்றார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றதில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென நீதிபதிகள் அந்தப் பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் 21-ம் தேதி வர இருக்கிறது.