Spiritual


தேனி மாவட்டம் சுருளி அருவியில் இன்று காலை நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நீராடி, மாலை போட்டுக்கொண்டனர். ஐயப்ப சீசன் துவங்கிவிட்டதால் இனி சுருளி அருவிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் : வீ.சக்தி அருணகிரி

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது `நூறு வருட கருணை’ என்ற சாய்பாபா பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார். நேற்று ஃபேஸ்புக்கில் அந்தப் பாடலின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட ரஹ்மான், முழுப்பாடல் விரைவில் எனவும் கூறியுள்ளார். பாடல் இந்தியில் இருந்ததால், தமிழிலும் வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் டிசம்பர் 10-ம் தேதி வரையில் 41 நாட்கள் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நடை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை கோயிலில் இந்த ஆண்டு மண்டலக்கால பூஜைகள் நாளை துவங்குகிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயப்பன் கோயில் மேல்சாந்தி ஏ.வி.உன்னிகிருஷ்ணன் மற்றும் மாளிகைபுரத்தன் கோயில் மேல்சாந்தி அனிஷ் நம்பூதிரி ஆகியோர் இன்று மாலை பொறுப்பேற்றுக்கொள்கின்றனர். இவர்கள் நாளை முதல் மண்டல கால பூஜைகளை நடத்துவார்கள்.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த ஆண்டு மண்டல கால பூஜை வரும் 16-ம் தேதி  தொடங்குகிறது. அதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, நவம்பர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இந்நிலையில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணத் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு  திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம் சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. 

 

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சமாதியின் நூற்றாண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல்முறையாக கோவை சாய்பாபா கோயிலில் 'சாய்பாபா புண்ணிய பாதுகை தரிசனம்' ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. பக்தர்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்து பாபாவின் பாதத்தை வணங்கிச் சென்றார்கள்.

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ண அறக்கட்டளை சார்பில் துளசி கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் துளசிக் கன்றுகளும் வழங்கப்பட்டன. 

 

நவம்பர் 2-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இறந்துபோன தங்களது முன்னோர்கள் நினைவுகூரும் விதமாக ஆன்மாக்கள் தினம் என்கிற கல்லறைத் திருநாள் அனுசரித்து வருகிறார்கள். இந்த நாளில் கிறிஸ்துவர்களின் கல்லறைத் தோட்டங்கள் சீரமைக்கப்பட்டு, பின்னர் கல்லறைத் தோட்டங்களில் பாதிரியார்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்துவார்கள்.

மாமல்லபுரத்தில் வருடத்தில் பத்துநாட்கள் பூதத்தாழ்வாரின் அவதார உற்சவம் நடைபெறும். 9ம்நாளான இன்று பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் வீதிஉலா வந்தார். தேரில் வீதியுலா வந்த பூதத்தாழ்வாரை பக்தர்கள் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றினர். உள்ளூர் மக்களோடு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பூதத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 110 -ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 55 -ம்ஆண்டு குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் முதல் நாள் நிகழ்ச்சியான ஆன்மீக விழாவை கோவை காமாட்சிபுரி ஆதீனம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேவர் நினைவாலய பொறுபாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்டில் 8 நாள்கள் வாஸ்து நாள்களாக கடைபிடிக்கப்படும். அதன்படி இன்று சிறப்பான வாஸ்து நாளாகும்.  இன்று காலை 7.44 முதல் 8.20 வரையிலான நேரம் வாஸ்து பூஜைகள் செய்ய நல்ல நேரம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. புதிய அல்லது மறுசீரமைப்பு கட்டிட வேலைகளை இந்நேரத்தில் தொடங்கலாம்.

அயர்லாந்தில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபிள் தனது 28 -வது வயதில் ஸ்வாமி விவேகானந்தரை சந்தித்தார். பின்னர் இந்தியா வந்த அவர் விவேகானந்தரின் சிஷ்யையாக ’நிவேதிதா' ஆனார். அன்றிலிருந்து இந்தியாவின் பல சமூக பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அர்ப்பணிப்பின் அதிதேவதையாகவே இருந்த சகோதரி நிவேதிதாவின் பிறந்த நாள் இன்று.

கோஷ்டாஷ்டமி திருநாள் பொதுவாக கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடியது. இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில்(இன்று) வந்துள்ளது. மாத்ஸ்ய புராணம் குறிப்பிடும் இந்த நாள் பசுக்களைக் கொண்டாடும் திருநாள். பசுவை வணங்கி அதன் அருளைப்பெற்றால் சகல தேவர்களின் அருளையும் பெறலாம் என்பது இந்த நாளின் தத்துவம்.

பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சண்முகர் -வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்!

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர்கோவிலில் வரும் நவம்பர் 3-ம்தேதி அன்று அன்னாபிஷேகவிழா நடைபெறுகிறது. விழாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது.

பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சண்முகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலை சென்று பாபாஜியின் குகைக்குள் தியானம் இருந்துவிட்டு வருவார். அங்கு வரும் யாத்ரீகர்களின் வசதிக்காக, ரஜினிகாந்தும் அவரின் நண்பர்களும் இணைந்து குகைக்கு அருகே தியான மண்டபம் ஒன்றைக் கட்டி வந்தார்கள். இதன் திறப்பு விழா அடுத்த மாதம் (நவம்பர்) 10-ம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தகப்பன் சாமியான முருகப்பெருமான் ஞானமே வடிவானவர். அந்த ஞானத்திற்கு துணை செய்ய, இணைந்தவர் தெய்வானை பிராட்டியார். தேவர்களை வாட்டி வதைத்த சூரபத்மனை சம்ஹரித்த சுப்பிரமணியருக்கு தனது மகளை கன்னிகா தானமாக கொடுத்தார் இந்திரன். எல்லா முருகன் ஆலயங்களிலும் இன்று முருகன் தெய்வானை திருமணத்தை பார்த்து அருள் பெறலாம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் வளாகத்திலுள்ள மணவாள மாமுனிகளின் திருநட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு மகாமுனிகள் மாடவீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து திருச்செந்தூர் கடற்கரைத் திடலில் கூடினர். சரியாக மாலை 4.30 மணிக்குக் கோயில் முன்பாக உள்ள கடற்கரையில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார். பக்தர்களின் அரோகரா கோசம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் அனைவருக்கும் செந்திலாண்டவரின் தரிசனம் கிடைக்க கோலாகலமாக நிறைவுற்றது சூரசம்ஹாரம்.

 

தாரகாசூரனை விண்ணில் வதம் செய்த இடம் திருப்போரூர் என்பதால், இங்கு கந்தசஷ்டி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று தாலுகாவுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் ஆலயத்தில் வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சிதரும் சிங்காரவேலர், கந்த சஷ்டி எனும் ஆறாவது நாளில் சூரசம்ஹாரத்தின் முக்கிய நாயகனாக விளங்குகிறார். ஐந்தாம் நாள், சிக்கலில் அன்னை சக்தி தேவியிடம் வேல் வாங்கி ஆசி பெறுவார். இந்தப் புகழ் பெற்ற வேல் வாங்கும் விழா இன்று நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் வரும் 25-ம் தேதி திருச்செந்தூரிலிருந்து இரவு 8.50-க்கு புறப்பட்டு இரவு 11.20-க்கு நெல்லைக்கு வரும். இதே போல மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து இரவு 10.45-க்கு புறப்பட்டு அதிகாலை 12.15க்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும்.