Sports


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கேப்டன் கோலி  மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ’அவர்கள் கேட்ட சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டது. ஆனால் முடிவு தற்போது இப்படி வந்துள்ளது’ என பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாம். 

அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான செய்திகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா விளக்கமளித்திருக்கிறார். அதில், `நான் அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே. இப்போது மட்டுமல்ல, எப்போதும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரஷித், இந்தப் போட்டியில் ஒரு பந்துகூட வீசவில்லை. தவிர பேட்டிங்கிலும் களமிறங்கவில்லை. ஒரு கேட்ச், ரன் அவுட்கூட செய்யவில்லை. வெற்றியில் எந்தப் பங்களிப்பும் செய்யாத இவருக்குப் போட்டி ஊதியம் ரூ.11 லட்சம்.

இங்கிலாந்து தோல்வி குறித்துப் பேசிய விராட் கோலி, 'இந்திய அணி வீரர்களைத் தேர்வு செய்ததில் தவறு உள்ளது. உமேஷ் யாதவ்வுக்கு பதிலாக குப்தீப் யாதவ்வை எடுத்தது தவறான முடிவாகும். சில நேரங்களில் மைதானங்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்காது. நாம், சரியான இடத்தில் பந்து வீசினாலும் சரியாக பவுன்ஸ் ஆகாது' என்று தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்குவிக்காத போதும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முறையே 33,29 ரன்கள் குவித்தார். இதுவே இந்தப்போட்டியில் அதிகபட்ச ரன்களாகும்.

லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் முரளி விஜய் விக்கெட்டை கைப்பற்றியது லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சன்  கைப்பற்றிய 100-வது விக்கெட்டாக அமைந்தது.

டி.என்.பி.எல், டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது.இந்தப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் இந்திய வீரர் முரளி விஜய் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளார். முதல் இன்னிங்சில் ஐந்து பந்துகளில் வெளியேறிய அவர், இரண்டாவது இன்னிங்சில் 8 பந்துகளில் வெளியேறினார். மேலும் இரண்டு இன்னிங்சிலும் அவர் ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆனது பெரும் சோகம்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலாவதாக முரளி விஜய்யை டக் அவுட் ஆக்கினார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சன் எடுக்கும் 100வது விக்கெட் இதுவாகும். இதன்மூலம் ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார்.

ஆப்கன் - அமெரிக்க போரினால் அங்கு ஏரளாமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான்  அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். 'மிகப்பெரிய அன்பைக் கொண்டு சிறிய அளவிலான காரியங்களை என்னால் செய்ய முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.  

 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நான்காம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்த நிலையில் 396 ரன்களில் முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. 

இந்திய கிரிக்கெட் அணியினர் உண்ணும் உணவுகளின் வகைகளை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு உணவை உண்டுவிட்டு வீரர்கள் எப்படி விளையாடுவார்கள், இவ்வளவு உணவை உண்பதால் தான் வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்று பலரும் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

பார்சிலோனா அணியின் கேப்டனாக  இருந்து வந்த ஆன்ட்ரே இனியஸ்டா கடந்தாண்டு பார்சிலோனா அணியிலிருந்து ஓய்வு பெற்றதன் காரணமாக, துணை கேப்டனாக இருந்த, லயோனால் மெஸ்ஸி தற்போது பார்சிலோனாவின் முழு நேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. இரண்டாவது நாளில் முதலில் பேட் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோலி 23 ரன்களும், அஸ்வின் 29 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் புஜாரா, குல்தீப் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 -ன் துவக்க விழாவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச்செல்லவுள்ளார். ஈட்டி எறிதல் வீரரான இவர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கோலி குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக், 'எந்த இடத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் கோலி. உலகில் கிரிக்கெட் வீரர்கள் யாரிடமும் இல்லாத சிறந்த நுட்பம் விராட் கோலியிடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். பிரைய்ன் லாரா, சச்சின் போன்ற வீரர்களைப் போன்றவர் கோலி' என்றார்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி தற்போது பெய்துவரும் சாரல் மழையால் தாமதமாகியுள்ளது. ஆடுகளம் இன்னமும் மூடப்பட்டுள்ளது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் விரைவில் ஆட்டம் தொடங்கும் என நம்பலாம்!

லார்ட்ஸில் இன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2 -வது டெஸ்ட் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ’லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகள்’ என்ற சாதனையைப் படைப்பார். ஒரே மைதானத்தில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் 2 வது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைப்பார். 

இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியானது. இதை உறுதி செய்துள்ள சேதேவ் யாதவ், `ஆசிய போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவலை மெயில் மூலம் அரசாங்கத்துக்குத் தெரிவிக்க உள்ளேன்' என்றார்.  

கபில் தேவ்வை யாருடனும் ஒப்பிடமுடியாது. அவர் ஒரு தலைமுறை கிரிக்கெட் வீரர் அல்ல. பிராட் மேன், சச்சின் டெண்டுல்கர் போன்று அவர் ஒரு ஜாம்பவான் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இளம்வீரர் ஹர்திக் பாண்டியாவை கபில் தேவ்வுடன் சிலர் ஒப்பிட்டுப் பேசி வரும் நிலையில் கவாஸ்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி போன்று தவான் ஆடிக்கொண்டிருந்தால் விக்கெட்டை இழந்து பெவிலியன் தான் திரும்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் தடுமாறிக்கொண்டிருக்கும் தவான் தன் மனநிலையை மாற்றிக்கொண்டு விளையாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கங்குலி தனது ட்விட்டர் பதிவில்,  ‘என் பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது. அதில் பதிவாகும் எந்தச் செய்தியையும் எந்த தகவலையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.  இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார். sganguly99 என்ற  இன்ஸ்டாகிராம் கணக்கில் கங்குலி குறித்த செய்திகள் படங்கள் பதிவாகி வருகின்றன. 

ஸ்பெயினில் நடந்த COTIF  கோப்பை கால்பந்து தொடரில், 20 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியும் அர்ஜென்டினாவும் மோதின.  ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இந்திய அணி கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆறுமுறை சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தியதால் இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிகிறது.

சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரில் சிந்து வெல்லும் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவாகும், இதன் மூலம் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.