Technology


பிரபல செயலியான வாட்ஸ்அப் சில பழைய போன்களுக்கு தங்கள் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் ஐஓஎஸ் 7 -ல் ஓடும் ஐபோன்களிலும் அதன் கீழ் உள்ள ஐஓஎஸ் வெர்ஷன்களில் ஓடும் ஐபோன்களிலும் 2020-க்குப் பிறகு செயல்படாது என அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 2.3.7 வரை இருக்கும் போன்களுக்கு - பிப்ரவரி 2020 வரை சப்போர்ட் இருக்கும்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க வோடபோன் - ஐடியா இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது அந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. நிறுவனத்தின் பெயரை, 'வோடபோன் ஐடியா லிமிடெட்' என மாற்றி இருப்பதாக, ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 'ஏர்டெல்' நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

புதிதாக இரண்டு வசதிகள் வாட்ஸ்அப்புக்கு வரவிருக்கின்றன. ஒன்று Dark Mode, மற்றொன்று Swipe to Reply. வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.283-ல் இருந்து இந்த வசதிகள் கிடைக்கும். தற்போது பீட்டா வெர்ஷன் வெளியாகியிருந்தாலும், அதில் இந்த இரண்டு வசதிகளும் சேர்க்கப்படவில்லை. இன்னும் சோதனை நிலையிலேயே இருப்பதுதான் அதற்கு காரணம் என்கிறார்கள்.

ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனான `ஆண்ட்ராய்டு பை’ தொடர்பான சில சோதனைகளில் கூகுள் ஈடுபட்டபோது பல யூஸர்களுக்கும் அந்தச் சோதனை அப்டேட் போய்விட்டது. இதனால், அந்த மொபைல் யூஸர்களுக்கே தெரியாமல் அவர்கள் மொபைலில் battery saving mode ஆக்டிவேட் ஆகிவிட்டது. இதைக் கூகுளும் `நாங்க தெரியாம பண்ணிட்டோம்... சாரி பாஸ்’ என ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் இந்தியாவுக்கு வந்து 20 ஆண்டுகள் முடிவடைந்ததைக் கொண்டாடும் விதமாக வெர்னாவின் அனிவர்சரி எடிஷனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. மொத்தம் 1000 கார்கள் மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். டாப் வேரியன்டில் மட்டுமே வெளிவரும் இந்த காரில் புது நிறங்கள், வயர்லெஸ் சார்ஜிங் எனப் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இனி  PNR Status யை வாட்ஸ் அப்பிலும் பார்க்கலாம். முதலில்  Make My trip-ன் வாட்ஸ்அப் எண்  7349389104 -ஐ உங்கள் மொபைலில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பிறகு, இந்த எண்ணுக்கு  PNR என டைப் பண்ணி, ஒரு இடைவெளி விட்டு  PNR எண்ணை டைப் பண்ணி அனுப்பினால் எளிதாக உங்கள்  PNR எந்த நிலையிலிருக்கிறது என்பதை பெற்றுக்கொள்ளலாம். 

ஒரு சாதாரண பேட்ச் மென்பொருள் மூலம் ஆதார் தகவல்தளத்தை ஹேக் செய்யமுடியும் என்ற திடுக்கிடும் தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. வெறும் 2,500 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு மென்பொருள் மூலம் உலகத்தில் இருக்கும் யார்வேண்டுமானாலும் ஒரு புதிய ஆதார் அட்டையையே உருவாக்க முடியுமாம். இதனை நம்ப வேண்டாம் என உதய் தெரிவித்துள்ளது.

தன் சேவை மையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தரமான காபியைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம். முக்கியமான காபி இடங்களிலிருந்து சிறப்பான காபியை இதற்காக வாங்கியிருக்கிறார்கள். கூடவே, ஒரு மணி நேரத்துக்கு அதிவேக இணையத்தையும் இலவசமாக வழங்குகிறார்கள். அதுக்குள்ளாக மொபையில் சரிசெய்து தரப்படும் என்கிறார்கள்.

 

ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்தர அறிமுக விழா, இந்த வருடம் செப்டம்பர் 12-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும், இந்த விழாவில் ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தும். இந்த முறை டூயல் சிம் போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் தனது கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதிய கட்டடம் ஒன்றைக் கட்டியுள்ளது. 22.7 ஏக்கர் பரப்பளவில், திறக்கப்படவுள்ள புதிய கட்டடம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மறுசுழற்சி நீர் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு, 64 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுமாம்!

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் களமிறங்கப்போகும் நிஸான் கிக்ஸின்( KICKS) டிசைன் ஸ்கெட்ச்சை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். முதல் வருடத்தில் 30 ஆயிரம் கிக்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யவும், இங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கு 20 ஆயிரம் கிக்ஸ் கார்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்திலும் இந்நிறுவனம் உள்ளது.

ஆப்பிள் வெளியிடவுள்ள புதியவகை ஐபோன், கேட்ஜெட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய 12.9 இன்ச், 11 இன்ச் ஐபேட் ப்ரோ டேப்லெட்  மற்றும் சீரிஸ் 4 இல் ஆப்பிள் வாட்ச் எனப் பலவும் எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் நோட்டிபிகேஷன், ஸ்கிரீன் டைமிங் என பல்வேறு அம்சங்கள் புதிதாக வரவுள்ளன.

வானில் பறக்கும்போதே தேஜாஸ் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி, இந்திய விமானப்படை சாதனைபடைத்துள்ளது. இந்தியப் போர் விமானம் ஒன்றுக்கு வானில் எரிபொருள் நிரப்பப்பட்டது இதுவே முதன்முறை. ரஷ்யத் தயாரிப்பான IL-78 MKI  ரக டேங்கர் விமானத்திலிருந்து, தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. 

நெக்ஸான் காரின் முதலாம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக டாடா மோட்டார்ஸ் நெக்ஸானில் Kraz மற்றும் Kraz+ எனும் இரண்டு புதிய வேரியன்டுகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. நெக்ஸான் Xm மற்றும் Xt வேரியன்டுகள் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கார் சிறிய ஸ்டைல் மாறுதல்களுடன் சில வசதிகளும் இணைந்த லிமிடெட் எடிஷன் மாடலாக விற்பனையாகப்போகிறது. 

சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் வியட்நாம் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி ஜெ6 மாடலில் 5.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பேனல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த வருடம் கூகுள் டெஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் சில அடிப்படை நிதி சேவைகளை வழங்கி வந்தது. தற்போது அதையே கூகுள் பே என்று பெயர் மாற்றம் செய்து அதன் மூலம் எளிய முறையில் பயனர்களுக்கு கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

சர்வேதச விண்வெளி மையத்தின் உட்பகுதியில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவது தெரியவந்தது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இருக்கும் பகுதியில் 2 மி.மீ அளவில் துளை ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது. விண்கற்களின் தாக்குதலால் இந்த துளை ஏற்பட்டிருக்கலாம் என "நாசா" தரப்பு தெரிவித்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி நிறுவன துணை தலைவர் மற்றும் சியோமி இந்தியா நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கூகுள் நிறுவனம், விநாடிக்கு 100 முறைகேடாக உள்ள விளம்பரங்களை நீக்குவதாகவும் விரைவில் விளம்பரங்கள் சரிபார்ப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஒரு கிளிக் செய்தால் பணம் என்பதற்காக பலர் இதை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 `கேமர்களை’ குறிவைத்து விற்பனைக்கு வந்திருக்கிறது, `வாவேயின்’ 'ஹானர் ப்ளே' . `ஹானரின்’ படைப்பான இந்த ஹானர் ப்ளேயில் தான், மொபைல் கேமிங்கில் அடுத்த பெரிய புரட்சியாக இருக்குமென்று சொல்லப்படும் ஜிபியு டர்போ ( GPU Turbo) டெக்னாலஜி, இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.  

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் இராம் ஹபீப். 30 வயதாகும் இவர் காஷ்மீர் இஸ்லாமியப் பெண்களில் முதல் விமான ஓட்டுநராக மாறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், `விமானப் பயிற்சியை முடித்த பின் நாடு திரும்பினேன். அனைவரும், என்னை ஆச்சர்யமாகப் பார்த்தனர்’ என்று தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் பதிவுகள் அனைத்தும் உண்மையானதா இல்லையா என்பதைக் கண்டறிய அந்நிறுவனம் புதிதாக ஒரு முடிவை எடுத்துள்ளது. ஒரு போஸ்ட்டுக்கு மீண்டும் மீண்டும் ஸ்பேம் ரிபோர்ட் வந்தால் முதலில் அந்த போஸ்ட் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்த வலைபக்கத்தை முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் லொகேஷன் ஆப்சனை அனைத்து வைக்கப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தை அறிய இயலும் என கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில், `லொகேஷன் ஹிஸ்டரி’ மூலம் வாடிக்கையாளர்களின் தனியுரிமைகளில் தலையிடுவதாகக் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வருகிறது, தற்போது நோக்கியா 6.1 ப்ளஸ்  மற்றும் 5.1 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிதாக இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 6.1 ப்ளஸ் விலை ரூ.15,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5.1 ப்ளஸ் ஸ்மார்ட்போன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

சந்திராயன் 1 விண்கலம் அனுப்பிய தகவல்களைக் கொண்டு நிலவில் ஐஸ்கட்டிகள் இருப்பது நாசாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதுமான அளவு ஐஸ்கட்டிகள் நிறைந்திருப்பதால் எதிர்காலத்தில் அங்கு தண்ணீர் கிடைக்குமென நம்பப்படுகிறது. எல்லாம் சாத்தியம் ஆகும் பட்சத்தில் மனிதர்களை நிலவில் குடியமர்த்தவும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.