Trending


டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தேசியக் கொடியினை ஏற்றினார். தேசியக் கொடியை அமித் ஷா ஏற்றும்போது எதிர்பாராமல் கொடி கீழே இறங்கிவிட்டது. அதன் பின்னர், சுதாரித்துக் கொண்ட அவர், வேகமாக மேலே ஏற்றினார். அமித் ஷா கொடியேற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரன்டாகி வருகிறது.

குஜராத் மாநிலம், சூரத்தில் 1,100 மீட்டர் நீளம் உள்ள மூவர்ண தேசியக் கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.100-க்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் கைகளில் கொடியினை பிடித்தவாறு நிற்கும் வீடியோ காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 1,100 மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியை மக்கள் ஏந்தி நிற்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள  இந்தியாவில் வாழத்தகுதியான நகரங்கள் பட்டியலில் புனே முதலிடம் பெற்றுள்ளது. நாட்டில் பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்து , தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது திருச்சி நகரம்!

கேரளாவில், அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

இடுக்கி அணையின் வரலாற்றில் முதல் முறையாக 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மிகுதியான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

 

சிறையில் தண்டனைக் காலம் முடிந்தும் அபராதம் செலுத்த முடியாமல் இருக்கும் கைதிகளுக்காக, போபாலைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆயுஷ் கிஷோர்   தனக்கு கிடைத்த உதவித்தொகையை வழங்கியுள்ளார்.  இவரின் உதவியால் 14 கைதிகள்  சுதந்திர தினத்தன்று விடுதலையாகின்றனர். 

ஆஸ்கர் தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2001-ம் ஆண்டு அனிமேஷன் படங்களுக்காக ஒரு சிறப்புப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது மேலும் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 'சிறந்த பிரபலமான திரைப்படம்’ என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

ஜூலை 24-ம் தேதி, ஜே35 என்ற திமிங்கிலம், குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் அந்தக் குட்டி இறந்துபோனது. அன்றே அதை புகைப்படம் எடுத்திருந்தார்கள்  NOAA Fisheries அமைப்பினர். நேற்று (ஆக., 8), மீண்டும் அந்தத் திமிங்கிலத்தை அதே அமைப்பினர் புகைப்படம் எடுத்திருக்கிறார். அப்போதும் இறந்துபோன தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு அலைந்திருக்கிறது திமிங்கிலம்.

தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இளைஞர் கூட்டம் ஒன்று, எதிரில் இருக்கும் மேம்பாலத்தின் மீது ஏறியது. அவர்கள் கொண்டு வந்த கருணாநிதியின் மிகப்பெரிய ஃப்ளெக்ஸை மேம்பாலத்தின் மேலிருந்து தொங்க விட்டார்கள். அவ்வளவு பெரிய பேனரில் அவர்கள் தலைவரைக் கண்டதும் கோஷங்கள் விண்ணை முட்டின.

எறும்பு, அளவில் சிறியதுதான். கொஞ்சம் கண் அசந்தால், வைரத்தையும் தூக்கிச் சென்றுவிடும். யூடியூபில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில்தான் அந்த அதிசயத்தைப் பார்க்க முடிந்தது. கட்டெறும்பு ஒன்று, நகைக்கடையில் இருந்து வைரக் கல்லை  இழுத்துக்கொண்டு செல்கிறது. அந்த வீடியோ, எந்த நாட்டில் பதிவானது? என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லடக்க நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. தேசமே கவனித்த ஒரு நிகழ்ச்சியில், குடும்பத்தினரின் சென்டிமென்ட் காயப்படாமலும் சிக்கல் இல்லாமலும் கையாண்டார். கருணாநிதியின் சமாதிக்குள் அவரும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப்போட்டது நெகிழ் தருணம்! 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நேற்று பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்பகுதியில் தொண்டர்கள் செருப்பு உட்பட 8 டன் குப்பை அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ராய் இயக்குநர் ஆர்.எஸ் ஷர்மா, ஆதார் சவாலில் தான் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘எனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டும் எனக்கு எந்தப் பாதிப்பும் வரவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் ட்விட்டரில் அவரது ஆதார் எண்ணைப் பகிர்ந்து முடிந்தால் ஹேக் செய்துகொள்ளுமாறு சவால் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இடுக்கி அணை முழுவதுமாக நிரம்பியது. இந்நிலையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரமாண்ட இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மும்பையில், ரயில் நிலையத்தில் மூன்று இளைஞர்கள் நடைமேடையில்  ‘கிகி சேலஞ்ச்’ என்ற பெயரில் நடனமாடியுள்ளனர்.இதனையடுத்து அந்த வீடியோவில் இருந்த மூன்று இளைஞர்களை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரும் வாசை (Vasai) ரயில் நிலையத்தை மூன்று நாள் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடைசி காலங்களில் அவரை சுமந்து சென்ற சக்கர நாற்காலியானது, அவரது இல்லத்தில் ஓரமாக தனியாக இருக்கும் புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நிறைவடைந்தது. அவரது உடல் மெரினாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து  ராணுவ மரியாதையுடன் 27 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. அவர் உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி அகற்றப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

ராஜாஜி அரங்கிலிருந்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ராணுவ வாகனத்தில் ஊர்வலமாகக் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தைக் காண லட்சக்கணக்கானோர் வழி நெடுகிலும் திரண்டுள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் சற்று முன்னர் தொடங்கியது. தி.மு.க தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்தில் மெரினா நோக்கியப் பயணம் தொடங்கியது. பெரியாரையும் அண்ணாவையும் கடந்து காயிதே மில்லத் சாலையில் பயணித்து, காமராஜர் சாலையை அடைந்து எம்ஜிஆர் சதுக்கத்தை கடந்து அண்ணனின் அருகில் உறங்கச் செல்கிறார் கருணாநிதி!

'கலைஞர் கொண்டுவந்த ஏதோவொரு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் RT செய்யவும்! முடிந்தவரை ரிப்ளையில் அது என்னவென்று மென்சனிடவும்’ என ட்விட்டரில் ஒருவர் இன்று மாலை ட்வீட்டினார். அதற்கு கருணாநிதியால் பயனடைந்தவர்கள் பதிலளிக்க, அந்த ட்வீட் த்ரெட் வைரல் ஆகிவருகிறது. லிங்க் கீழே!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு எடப்பாடியை ஸ்டாலின் சந்தித்து உள்ளார். அவருடன் மு.க.அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உள்ளனர்.

வயலில் ஏர் கலப்பையை விட்டுவிட்டு சேற்றில் `கிகி சேலஞ்ச்’ செய்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டனர் நம் இந்திய விவசாய இளைஞர்கள். இவர்களின் கிகி சேலஞ்ச் குறித்து தென்னாப்பிரிக்கா திரைப்பிரபலம் ட்ரெவோர் நோவா `கிகி சேலஞ்ச்சில் வெற்றியாளர்கள் இவர்கள்தாம்’ என்று இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவால் `இந்திய கிகி சேலஞ்ச்’ இன்னும் பிரபலமாகிவிட்டது. 

கொடைக்கானல் மலைப் பகுதிகளை நீலக் குறிஞ்சி மலர்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இந்த ஊத நிறப் பூக்களைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பனிப் பொழிவும் ஊதா நிற போர்வையும் கொடைக்கானல் மலைப்பகுதிகளின் அழகைக் கூட்டிவிட்டன!   

'KiKi do you love me' என்ற பாடலுக்கு இந்திய இளைஞர்கள் காளை மாடுகளுடன் விவசாய நிலத்தில் நடனம் ஆடி வரும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாலையில் நடனம் ஆடி விபத்துக்குள்ளாகாமல், இவ்வாறு வயல் வெளிகளில் நடனம் ஆடுவது கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் பார்ப்பவர்கள் ரசிக்கும் வண்ணமும் உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். 

இங்கிலாந்தில் ஹாம்ஸ்ஹயர் என்னும் பகுதியை சேர்த்த 5 வயது சிறுமி 12 அடிநீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருகிறார். மேலும் அவர் அந்த பாம்பிற்கு முத்தமிடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.